search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி தலைமை ஆசிரியை"

    • மாணவ-மாணவிகள் மட்டுமல்லாது கிராமத்தில் உள்ள பொது மக்களின் அன்பையும் பெற்றார்.
    • உசிலம்பட்டியில் நடந்த இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னக்குறவடி கிராமத்தில் அமைந்துள்ளது அரசு தொடக்கப்பள்ளி. இந்த பள்ளியில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் தலைமை ஆசிரியையாக வடுகப் பட்டியைச் சேர்ந்த செல்வ சிரோன்மணி என்பவர் பணியாற்றி வந்தார். அரசு தொடக்கப்பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏழை மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    5-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் மாணவ-மாணவிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த தலைமை ஆசிரியை செல்வ சிரோன்மணி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். மேலும் மாணவர்களை பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வைத்து அவர் களின் தனித்திறமைகளையும் ஊக்குவித்தார். ஒவ்வொரு மாணவ-மாணவிகளின் கல்வித்திறன் செயல்பாடுகளை கண்காணித்து தகுந்த முறையில் அவர்கள் கல்வி கற்க தலைமை ஆசிரியை நடவடிக்கை எடுத்தார். இதனால் அப்பகுதி மக்களின் நன்மதிப்பையும் செல்வ சிரோன்மணி பெற்றார்.

    இந்த அரசு பள்ளியில் பயின்ற மாணவ-மாணவிகள் இன்று மருத்துவர்களாகவும், பொறியாளர்கள், அரசு பணிகள் உள்ளிட்ட பல்வேறு உயர் பணிகளில் உள்ளனர். மேலும் இங்கு படித்துவிட்டு உயர்கல்விக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கும் பல்வேறு வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியை வழங்கி வந்தார்.

    இதனால் மாணவ-மாணவிகள் மட்டுமல்லாது கிராமத்தில் உள்ள பொது மக்களின் அன்பையும் பெற்றார். பள்ளிக் கட்டிட வளர்ச்சி, பள்ளிக்கான உபகரணங்களின் வளர்ச்சிகள் என பலவற்றையும் தன் முயற்சியால் பெற்று கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய தலைமையாசிரியை செல்வ சிரோன்மணி பணி நிறைவு பெற்றார். இதை அறிந்த கிராம மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் மாலை, கிரீடம் அணிவித்தும், தாய்வீட்டு சீதனமாக சீர் செய்வதை போன்று பல்வேறு பரிசுகளை கிராமத்தின் சார்பாக ஊர்வலமாக எடுத்து வந்து வழங்கினர்.

    தொடர்ந்து மேள தாளத்துடன் கிராமத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு அழைத்து சென்று சிறப்பு பூஜைகள் செய்து, அவரது நினைவாக மரக் கன்றுகளையும் நடவைத்து தலைமை ஆசிரியைக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பினர்.

    உசிலம்பட்டியில் நடந்த இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×